பென்னாகரம் – மார்ச். 17:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தேசிய திறனாய்வு (NMMS) தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்காக 2026 ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வு தேர்வு (NMMS) முடிவுகள் பிப்ரவரி 19ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை அடிப்படையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வில், இராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவன் ஸ்ரீ சரவணன் மற்றும் மாணவி ஞானஸ்ரீ ஆகியோர் தேர்ச்சி பெற்று உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் இருவருக்கும் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ₹1,000 வீதம் மொத்தம் ₹48,000 அரசின் சார்பில் உதவித்தொகையாக வழங்கப்படும்.
இந்த சாதனையைத் தொடர்ந்து, மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், ஆசிரியர்கள் சுப்பிரமணி உள்ளிட்டோர், பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)