தருமபுரி, மார்ச் 30:
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்திடவும், சுதந்திரமான மற்றும் எளிதான வாக்குப்பதிவை ஏற்படுத்திடவும் பல்வேறு புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:
- வாக்குச்சாவடிகளில், வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்காளர்கள் தங்களது மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்துச் செல்ல வசதி ஏற்படுத்தப்படும். இதற்கென தன்னார்வலர்களும் பணியில் இருப்பார்கள்.
- தெளிவான Voter Information Slip வழங்கப்படும். இதில் வாக்காளர்களின் பெயர் இடம்பெற்றுள்ள வாக்குச்சாவடி, பாக எண், வரிசை எண் ஆகியவை பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கும். இதனால் சரியான வாக்குச்சாவடியை எளிதில் கண்டறியலாம்.
- வாக்குப்பதிவு நாளன்று, 2 மணி நேரத்திற்கு ஒருமுறை பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அறிய PRO App (ECINET) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் இதனை பயன்படுத்துவார்கள்.
- ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சம் 1200 வாக்காளர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டதால், நீண்ட நேர காத்திருப்பு குறையும்.
- அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100% CCTV கண்காணிப்பு அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவு முழுமையாக பதிவு செய்யப்படும்.
- வாக்குப்பதிவு நாளன்று, வாக்குச்சாவடி மையத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திற்கு அப்பால் மட்டுமே வேட்பாளர்கள் வாக்குசேகரிப்பு சாவடிகளை அமைக்க அனுமதி.
- வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் வண்ணப்படங்களாக இடம்பெறும்.
- வாக்கு எண்ணிக்கையின் போது Form 17C மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரத் தகவல்களில் வேறுபாடு இருந்தால், அந்த வாக்குச்சாவடிகளின் VVPAT சீட்டுகள் கட்டாயம் எண்ணப்படும்.
- வாக்கு எண்ணிக்கைக்கு பின், 2 மற்றும் 3ஆம் இடம் பெற்ற வேட்பாளர்கள் விரும்பினால், EVM மைக்ரோ கண்ட்ரோலர் மற்றும் மெமரி விவரங்களை ஆய்வு செய்ய விண்ணப்பிக்கலாம்.
- வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
- EVM எண்ணிக்கைக்கு முன்பாகவே அஞ்சல் வாக்குகள் எண்ணிக்கை முடிக்கப்படும்.
- PRO App மூலம் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் அறிய வசதி செய்யப்பட்டுள்ளது.
- வாக்கு எண்ணிக்கை விவரங்களை உடனடியாக அறிய Digital Index Card முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
“மக்களாட்சி தழைத்திட, ‘என் வாக்கு என் உரிமை’ என்பதை உணர்ந்து, எந்தவித பாதிப்புகளுக்கும் ஆளாகாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும்” என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரெ. சதீஸ் தெரிவித்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

