பாலக்கோடு, மார்ச் 30:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள செம்மநத்தம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கல்யாண சீனிவாசபெருமாள் கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் சிறப்பாக தொடங்கியது. முக்கிய நாளான இன்று அதிகாலை யாகசாலையில் கோமாதா பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம் மற்றும் வேதபாராயணம் முழங்க பூர்ணாஹுதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனித கலச தீர்த்தக் குடங்கள் முக்கியஸ்தர்களால் தலைமேல் ஏந்தி கொண்டு சென்று, கோயில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கலசத்துக்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ கல்யாண சீனிவாசபெருமாளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஊர் கவுண்டர் சின்னபையன், மந்திரி கவுண்டர் நாகராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரியப்பன், வேளாவள்ளி சேகர், வேடி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

