தருமபுரி, மார்ச். 31:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்–2026 முன்னிட்டு, தி.மு.க இளைஞரணி தலைவரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அரூர் (தனி) தொகுதி தி.மு.க வேட்பாளர் சண்முகத்தை ஆதரித்து அவர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது: “தி.மு.க மீண்டும் ஆட்சி அமைந்தவுடன் ‘இல்லத்தரசி திட்டம்’ மீண்டும் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். இதன் மூலம் இல்லத்தரசிகள் தங்களுக்குத் தேவையான மின்சாதனங்களை வாங்கிக் கொள்ளலாம். கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால், இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. மத்திய அரசு போதுமான நிதி வழங்காத போதிலும், முதல்வர் ஸ்டாலின் மக்களின் தேவைகளை உணர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்,” என்றார்.
மேலும், அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க மீது கடுமையாக விமர்சனம் செய்த அவர்,
“தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைய விடக்கூடாது. அ.தி.மு.கக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பா.ஜ.கக்கு அளிக்கும் வாக்காகும். இந்தத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் டெல்லி இடையேயான அரசியல் போராட்டமாகும். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வருவது அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே. தமிழகத்தின் உரிமைகளை காக்கும் வகையில் இந்தத் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்,” என்று கூறினார்.
அரூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் சண்முகத்திற்கு ‘உதயசூரியன்’ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

