Type Here to Get Search Results !

தருமபுரியில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு.


தருமபுரி – மார்ச் 21:


தருமபுரி மாவட்டத்தில் ரம்ஜான் (ஈத்) பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து ஆர்வத்துடன் பங்கேற்றனர். முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான், தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதோடு, தருமபுரி மாவட்டத்திலும் ஆன்மிக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.


தருமபுரி நகர அனைத்து மசூதிகளின் கூட்டமைப்பு சார்பில், தருமபுரி–கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள ஈத்கா ஏரிக்கரையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட தலைமை ஹாஜி பதல் கரீம் பங்கேற்றார். தொழுகை முடிந்ததும், முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் நல்வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும், ஏழை மக்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.


இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை மாவட்ட முத்தவல்லிகள் சங்கத் தலைவர் ஜப்பார், நகர மசூதிகளின் கூட்டமைப்பு செயலாளர் எக்பால், தலைவர் முனவர் ஜான், பொருளாளர் முஸ்தாக், துணை தலைவர் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடாக காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


மேலும், தருமபுரி நகரத்தின் டேகிஸ்பேட்டை, கீழ் மசூதி தெரு, முகமது அலி கிளப் ரோடு, மதிகோன்பாளையம், வி.ஜெட்டிஅள்ளி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், மாவட்டத்தின் தொப்பூர், பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, ஏரியூர், நல்லம்பள்ளி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், மாரண்டஹள்ளி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.


ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மசூதிகள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்ததுடன், இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies