Type Here to Get Search Results !

இலக்கியம்பட்டியில் இன்று தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.


தருமபுரி - மார்ச் 11:


தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம் இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இஆப., அவர்கள் இன்று (11.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை அரசுத் தேர்வுகள் துறையால் நடப்பு கல்வியாண்டிற்கான (2025–26) 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வருகின்ற 06.04.2026 வரை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திலும் இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் 103 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1 அரசு மேல் ஆதிதிராவிடர் நிலைப்பள்ளி, 3 உறைவிட மேல்நிலைப்பள்ளிகள், 1 சமூக நலத்துறையின் மாற்றுத்திறனாளிகள் மேல்நிலைப்பள்ளி மற்றும் 63 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்ட மொத்தம் 175 பள்ளிகளைச் சேர்ந்த 10,512 மாணவர்கள் மற்றும் 9,677 மாணவியர்கள் என மொத்தம் 20,189 மாணவ, மாணவியர்கள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.


இந்தத் தேர்வு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 95 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. தேர்வுப் பணிகளில் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், 110 பறக்கும் படைகள், வழித்தட அலுவலர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவும் ஸ்க்ரைப் (Scribe), வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் உள்ளிட்ட சுமார் 3,500 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


மேலும் தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் மற்றும் 2 விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் எளிதில் செல்வதற்காக பேருந்துகள் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அதேபோல் வினாத்தாள்கள் 21 வழித்தடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தேர்வு மையங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், மின்தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


மாணவ, மாணவியர்கள் எந்தவித அச்சமோ பதற்றமோ இல்லாமல் நேர்மையாகவும் மகிழ்ச்சியுடனும் தேர்வை எழுத வேண்டும் என்றும், தேர்வுகள் எந்தவித தவறும் இல்லாமல் சிறப்பாக நடைபெற மாவட்ட நிர்வாகம் முழுமையான ஏற்பாடுகளை செய்துள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் தெரிவித்தார்.


இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஐ. ஜோதி சந்திரா உடனிருந்தார்.

© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

FB https://www.facebook.com/Thagadurkural | X https://x.com/thagadurkural | WhatsApp Channel https://x.com/thagadurkural 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies