பாலக்கோடு, பிப். 28:
பாலக்கோடு 6வது வார்டு, புதூர் மாரியம்மன் கோயில் அருகில் அமைக்கப்பட்ட நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா பேரூராட்சி தலைவர் முரளி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி, ஒன்றிய செயலாளர் ரவி, நகர அவைத்தலைவர் அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களுக்கு சுத்தமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்குதல் மற்றும் 5 ரூபாய்க்கு 20 லிட்டர் தண்ணீர் வழங்கும் நோக்கில், பாலக்கோடு பேரூராட்சி சார்பில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதூர் மாரியம்மன் கோயில் அருகில் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, பேரூராட்சி தலைவர் முரளி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா, வார்டு கவுன்சிலர்கள் பத்தேகான், மோகன், சாதிக் பாஷா, ரூஹித், கிளை செயலாளர்கள் ராஜி, வடிவேல், மோகன், இளைஞர் அணி மன்சூர், பேரூர் கழக துணைச் செயலாளர் மாதேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் 6வது வார்டு பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்கும் நிலையில், நீர்வழி நோய்கள் குறைய உதவும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)