தருமபுரி – பிப்ரவரி 05:
தருமபுரி நகராட்சியின் சார்பில், தனியார் பங்களிப்புடன் சோகத்தூர் பஞ்சாயத்து பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம், தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த புதிய பேருந்து நிலையம், தருமபுரி நகரின் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 55 பேருந்துகள் ஒரே நேரத்தில் உள்ளே வந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்நிலையத்தில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன சுகாதார வளாகங்கள், சிசிடிவி கேமரா மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள், ஏசி பயணிகள் ஓய்வு அறைகள், டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள், தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை மற்றும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பேருந்து நிலைய திறப்பு விழாவில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, மாவட்ட ஆட்சியர் சதீஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், ஜி.கே.மணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, டிஎன்சி குழும தலைவர் டி.சி.இளங்கோவன், டி.என்.சி.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அசோக் குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகராட்சி துணைத் தலைவர் நித்திய அன்பழகன், நகராட்சி ஆணையர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து, பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பல்வேறு வழித்தட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
-
சேலம் செல்லும் பேருந்துகள் தருமபுரி நகரப் பகுதி வழியாகச் செல்லவும்,
-
சேலத்திலிருந்து வரும் பேருந்துகள் அதியமான் கோட்டை வழியாகச் செல்லவும்,
-
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகள் தருமபுரி நான்கு ரோடு வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடையவும்,
-
பாலக்கோடு பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலை 44 (NH-44) வழியாகவும்,
-
பென்னாகரத்திலிருந்து வரும் பேருந்துகள் நேரடியாக பேருந்து நிலையத்தின் முன்பகுதி வழியாக உள்ளே செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரியை ஆண்ட வள்ளல் அதியமான் பெயரை புதிய பேருந்து நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக அளித்தால், அவற்றை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்தார்.
புதிய பேருந்து நிலையம் தொடங்கப்பட்டதன் மூலம், தருமபுரி நகரின் போக்குவரத்து வசதிகள் மேம்பட்டு, பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.gif)

.jpg)