Type Here to Get Search Results !

மரபு சந்தை மூலம் சிறுதானியங்களை வழங்கும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்த வேண்டும் – மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ்.


பாப்பாரப்பட்டி, பிப்.24:
 


தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சிறுதானியங்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்கான சிறுதானிய மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பணிமனை மற்றும் சிறுதானிய கண்காட்சி, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது.


இப்பணிமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் பங்கேற்று விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் 1.20 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் கேழ்வரகு, கம்பு, தினை, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்கள் பயிரிடப்பட்டு வருவதாக தெரிவித்தார். இச்சிறுதானியங்களின் நன்மைகள், மதிப்புக் கூட்டப்பட்ட தயாரிப்புகள், ஊட்டச்சத்துக்கள், சாகுபடி முறைகள், பூச்சிநோய் கட்டுப்பாடு, வீரிய இரகங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் முறைகள் குறித்து கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.


நாகரிக வளர்ச்சி மற்றும் எளிதில் சமைக்கக் கூடிய அரிசி வகைகள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டது என்றும், அவற்றை மதிப்புக் கூட்டப்பட்ட உணவுகளாக உட்கொள்வதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை உணர முடியும் என்றும் தெரிவித்தார்.


சிறுதானியங்களில் நார்சத்து அதிகம் உள்ளதால் உடல் பருமன் குறைய உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை தடுக்கும் தன்மை கொண்டது. கம்பு போன்ற சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. புரதம், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகம் உள்ளதாகவும் அவர் விளக்கினார்.


அரசு சார்பில் ஆண்டுக்கு இரண்டு முறை சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது என்றும் கூறினார்.


மேலும், தருமபுரி பாரதிபுரம் மரபு சந்தையில் தன்னார்வலர்கள் இணைந்து சிறுதானியங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது என்றும், அவர்கள் சிறுதானியங்களின் பயன்களை எடுத்துரைத்து விற்பனை செய்து வருவது சிறந்த முன்மாதிரி என்றும் தெரிவித்தார். இத்தகைய முயற்சிகளை அனைத்து தரப்பினரும் ஊக்கப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.


நிகழ்ச்சியில் வேளாண் வணிகத் துறை அலுவலர்கள், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் மற்றும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies