தருமபுரி, பிப்.23:
தருமபுரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் நகராட்சி நிர்வாகம் அகற்றியதை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது, அதிமுகவினர் தெரிவித்ததாவது: ஜெயலலிதா பிறந்தநாள் வாழ்த்து பேனர்கள் நகராட்சி அனுமதி பெற்று நகரின் 37 இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், பேனர்கள் அதிக இடங்களில் இருப்பதாகக் கூறி நகராட்சி நிர்வாகம் அவற்றை அகற்றியதாக குற்றம்சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் K.P.அன்பழகன் தலைமையில் தருமபுரி–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அகற்றப்பட்ட பேனர்களை மீண்டும் அதே இடங்களில் வைக்க வேண்டும், இல்லையெனில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் நகராட்சி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முன்னாள் அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்த மறியல் முயற்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, நகர செயலாளர் பூக்கடை ரவி, மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)