தருமபுரி | ஜனவரி 30 :
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (30.01.2026) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்தி வரும் பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்தும், அவை விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடைவதற்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி 2026 மாதத்தில் 2.92 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 2025–2026 ஆம் ஆண்டிற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2,03,030 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் விதைகள், பருத்தி மற்றும் கரும்பு சாகுபடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 23.01.2026 வரை 1,53,569 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டிற்கான விதை இருப்பு நிலவரமாக,
-
நெல் விதைகள் – 1,02,176 மெ.டன்,
-
சிறுதானியங்கள் (ராகி, சோளம், சாமை, கம்பு, குதிரைவாலி) – 86,839 மெ.டன்,
-
பயறு வகைகள் – 40,296 மெ.டன்,
-
எண்ணெய் விதைகள் – 62,570 மெ.டன் இருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வேளாண் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் 2025–2026 ஆம் ஆண்டிற்கு 1,088 மெட்ரிக் டன் விதைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், இதுவரை 608.508 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர உரத் தேவை 41,030 மெட்ரிக் டன் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும், யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவில் இருப்பதாகவும் விளக்கப்பட்டது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் உயிர் உரங்களும் போதுமான அளவில் இருப்பில் உள்ளன.
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் 14,019 விவசாயிகள் 13,374 ஏக்கர் பரப்பளவில் பயிர் காப்பீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் 2025 டிசம்பர் வரை 7,19,543 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டுறவுத் துறை சார்பில் 01.04.2025 முதல் 31.12.2025 வரை நெல், எண்ணெய் விதைகள், கரும்பு, மரவள்ளி, மஞ்சள், மா, காய்கறிகள், வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு 50,533 விவசாயிகளுக்கு ரூ.515.06 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் போதிய சர்க்கரை இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் வழங்கிய கோரிக்கை மனுக்களை உரிய துறைகளின் மூலம் விரைந்து பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். மேலும், வேளாண்மை சார்ந்த அனைத்து நலத்திட்டங்களும் விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர்களின் உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் அலுவலர்கள் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பட்டு வளர்ச்சி, கூட்டுறவு துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)