தருமபுரி | ஜனவரி 28:
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில், கிருஷ்ணாபுரம் கலைஞர் திடலில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரளான பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்திற்கு தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் தலைமை வகித்தார். மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் மு.உத்ராபதி, தலைமை கழக பேச்சாளர் சென்னை அரங்கநாதன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் கொ.ரமேஷ் உள்ளிட்டோர் வீர வணக்க நாள் எழுச்சி உரையாற்றினர்.
மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் மு.உத்ராபதி பேசுகையில், “திராவிட மாடல் என்ன செய்தது என்று வரலாறு தெரியாதவர்கள் கேட்கிறார்கள். இடுப்பில் துண்டு கட்டி ஒடுக்கி வைக்கப்பட்ட மக்களை தோளில் துண்டு போட வைத்தது திராவிட மாடல் தான். பெண்கள் கையில் இருந்து கரண்டியைப் பிடுங்கி கல்வியை கொடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார். அந்தக் கல்வியை பெண்களுக்கு அளித்து, சைக்கிள் ஓட்டினாலே தவறு என்று நினைத்த சமுதாயத்தில் பெண்களை விமானம் ஓட்டும் உயரத்திற்கு கொண்டு சென்றவர் நம் தலைவர்,” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், “இந்தியாவிலேயே பெண்களின் பேராதரவை பெற்ற ஒரே முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான். அவருக்கு உறுதுணையாக இளைஞர் அணியும், அதை வழிநடத்தும் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இருப்பதால், திராவிட மாடல் ஆட்சி 2026 மட்டுமல்ல 2036 வரையும் தமிழ்நாட்டை ஆளும்,” என உறுதியாக பேசினார்.
எதிர்க்கட்சிகளின் அரசியல் நிலைப்பாடுகளை விமர்சித்த அவர், “திமுக மொழிப்போர் தியாகிகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துகிறது. ஆனால் சிலர் தங்களது சொந்த நலன்களை காப்பாற்றுவதற்காகவே அரசியல் நடத்துகிறார்கள். இந்த கூட்டத்தை பார்த்தால், இது வீர வணக்க நாள் கூட்டமா அல்லது வரவிருக்கும் தேர்தல் வெற்றியின் முன்னோட்டமா என்றே தோன்றுகிறது,” எனக் கூறினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் கே.மனோகரன், மாநில நிர்வாகிகள் சூடப்பட்டி சுப்ரமணி, சத்தியமூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.பிரபுராஜசேகர், எம்.வி.டி.கோபால், சக்திவேல், முத்துக்குமார், சரவணன், முனியப்பன், மாது, மகளிர் அணி நிர்வாகிகள் கவிதா மோகன்தாஸ், ஜெயா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மா.சந்தர், துணை அமைப்பாளர்கள் இரா.முனுசாமி, சதாசுர்ஜித், பிரபு, புனிதா உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.