தருமபுரி, டிச. 18:
தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.12.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளை நினைவுகூரும் வகையில், தருமபுரி மாவட்டத்தில் 17.12.2025 முதல் 26.12.2025 வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாள் நிகழ்ச்சியாக, தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ஆட்சிமொழிச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.
ஆட்சிமொழிச் சட்ட வாரவிழாவின் ஒரு பகுதியாக, கணினித் தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், கணினித் தமிழ் பயன்பாடு, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் அமைப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம், ஆட்சிமொழி மின்காட்சி உரை, ஆட்சிமொழி வரலாறு மற்றும் சட்டம், தமிழில் குறிப்புகள், வரைவுகள் மற்றும் செயல்முறை ஆணைகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகள், ஆட்சிமொழி திட்ட விளக்கக் கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், ஆட்சிமொழிச் சட்ட வாரவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி, பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, தருமபுரி–சேலம் பிரதான சாலை வழியாக அரசு கலைக் கல்லூரி வரை சென்று நிறைவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் வணிகர் சங்கத்தினர் பங்கேற்று, தமிழ்மொழியின் அவசியம் மற்றும் சிறப்புகளை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். முன்னதாக, தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி காயத்ரி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திரு. பெ. ராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கலாவதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி பவித்ரா, மாவட்ட கருவூல அலுவலர் திரு. ஜெ. மோகனசுந்தரம், பள்ளி துணை ஆய்வாளர் திரு. பொ. பொன்னுசாமி, தமிழ்க் கவிஞர் மன்றம் தலைவர் புலவர் கோ. வெங்கடாசலம், குறள் நெறிப்பேரவை தலைவர் புலவர் மு. பரமசிவம், கம்பன் பேரவைச் செயலாளர் புலவர் க. குமரவேல், தமிழ் ஆர்வலர்கள், அரசு கலைக் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)