தருமபுரி, டிச.24:
தருமபுரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட மகளிர் அதிகாரம் மையம், ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மை தருமபுரி அறக்கட்டளை ஆகியவை இணைந்து, ‘பெண் குழந்தைகளை காப்போம் – பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, குழந்தை திருமணங்கள் தடுப்பு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தருமபுரி அரசு மருத்துவமனையில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பருவ வயதை கடந்த பிறகு பெண் குழந்தைகளை வீட்டில் வைத்திருப்பது பாதுகாப்பாக இருக்காது என்ற தவறான நம்பிக்கையால், சில பெற்றோர் சிறுவயதிலேயே மகள்களுக்கு திருமணம் செய்து வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுபோன்ற எண்ணங்களை மாற்றி, குழந்தை திருமணங்களை முற்றிலும் தடுப்பதே இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த முகாமின் போது, தருமபுரி அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைகளை போற்றும் விதமாக அவர்களது குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட சமூக நல அலுவலர் ஆ. கலாவதி அவர்கள் தலைமை தாங்கினார். இதில் தருமபுரி அரசு மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவர் பாவேந்தன், குழந்தை நல மருத்துவர்கள் பாலாஜி, மருத்துவர் கீதா ஆனந்தன், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த விழிப்புணர்வு முகாமை மை தருமபுரி தொண்டு நிறுவனம், தருமபுரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் பணியாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் இணைந்து நடத்தினர். பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க சமூகத்தின் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற செய்தியை எடுத்துச் செல்லும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.

.jpg)