பொம்மிடி, நவ. 25 -
தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக உயர்த்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி பா. ஜெபசிங் தொடர்ந்து வைத்த கோரிக்கை வெற்றிபெற்றுள்ளது.
பா. ஜெபசிங் பலமுறை மாவட்ட சுகாதார துறையிடம் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன் வழங்கப்பட்ட பதிலில், “8 கி.மீ. தொலைவுக்குள் வேறு அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை இருக்கக்கூடாது, மேலும் அந்த பகுதியில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை இருக்க வேண்டும்” என்ற காரணத்தால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
“பொ.மல்லாபுரம் மருத்துவமனையிலிருந்து 8 கிலோமீட்டர் சுற்றளவில் எந்த அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையும் இல்லை. நகர மக்களுடன் சேர்த்து திப்பிரெட்டிஅள்ளி, கொண்டகரஅள்ளி, வே. முத்தம்பட்டி, கோடுஅள்ளி, B. துறிஞ்சிப்படடி, B. பள்ளிப்பட்டி, ரேகடஅள்ளி, ராமமூர்த்திநகர், வீராச்சியூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்த்து மக்கள் தொகை 50,000–ஐ தாண்டுகிறது” என குறிப்பிட்டு உரிய நடவடிக்கை கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை பரிசீலித்த தமிழக அரசு மற்றும் தருமபுரி மாவட்ட சுகாதார துறை, பொ.மல்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக மாற்றுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் பொ.மல்லாபுரம் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)
