வரும் நவம்பர் 2025-ஆம் மாத தொடக்கத்தில் வழங்கப்படவுள்ள 21-ஆவது தவணை உதவித் தொகையை பெறுவதற்கு, **தனித்துவ விவசாய அடையாள அட்டை (Farmers Registry)**யில் பதிவு செய்வது கட்டாயம் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 78 ஆயிரம் விவசாயிகள் மட்டுமே https://tnfr.agristack.gov.in என்ற வலைதளத்தின் மூலம் பதிவு செய்துள்ளனர். இன்னும் 23,517 விவசாயிகள் பதிவு செய்யாத நிலையில் உள்ளனர். இவர்கள் விரைவாக தனித்துவ விவசாய அடையாள எண்ணைப் பெற்றுக்கொள்ளாவிட்டால், 21-ஆவது தவணை உதவித் தொகையை பெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகள் தங்களது சிட்டா, ஆதார் எண் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் உடன் அருகிலுள்ள வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை அலுவலகம் அல்லது பொது சேவை மையம் (CSC) மூலமாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், கூட்டு பட்டா நிலம் கொண்ட விவசாயிகள் தங்களது ஆதார் எண் மூலம் வலைதளத்தில் பதிவு சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். முன்னோர்களின் பெயரில் பட்டா நிலம் வைத்துள்ள விவசாயிகள் தங்களது பெயரில் சிட்டா பெற்று, அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்தால் மட்டுமே, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்தார்.