இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் திரு. இரா. சங்கர் தலைமையில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் சிறப்புரை வழங்கினார். கல்லூரி வணிகவியல் பேராசிரியர் முனைவர் வெங்கடாசலம் வரவேற்புரையாற்றினார். பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், வட்ட வழங்கல் அலுவலர் த. முல்லைக்கொடி, மற்றும் காந்தி நுகர்வோர் அமைப்பு தலைவர் சம்பத் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது.
முதல்வர் தனது உரையில், “பாதுகாப்பான உணவு, அயோடின் சத்து மற்றும் அதன் அவசியம் குறித்து மாணவர்கள் அறிவு பெற்றதுடன், தங்கள் வீடு மற்றும் சமூகத்தில் விழிப்புணர்வு தூதுவர்களாக செயல்பட வேண்டும்,” எனக் கூறினார். மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் அவர்கள் தனது சிறப்புரையில், “அயோடின் சத்து பற்றாக்குறை மூளை வளர்ச்சி குறைவு, நினைவாற்றல் மங்குதல், மாலைக்கண் நோய், முன்கழுத்து கழலை, கர்ப்பிணி பெண்களில் கரு சிதைவு, நரம்பு கோளாறுகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு காரணமாகிறது. எனவே அரசு உப்பில் அயோடின் செறிவூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது,” என்றார்.
அவர் மேலும், “அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவது அவசியம். அயோடின் உள்ள உப்பு பாக்கெட்டுகளில் சிரிக்கும் சூரியன் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். அதைப் பார்த்தே நாம் வாங்க வேண்டும். தற்போது அரிசி, பால், சமையல் எண்ணெய், கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களிலும் நுண்ணூட்டச்சத்துக்கள் செறிவூட்டப்பட்டு வழங்கப்படுகின்றன. செறிவூட்டப்பட்ட அரிசி பாக்கெட்டுகளில் ‘F’ குறியீடு இருக்கும்,” என விளக்கமளித்தார்.
பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் அவர்கள், அயோடின் உள்ள உப்பு மற்றும் இல்லாத உப்பு இடையேயான வேறுபாட்டை MBI kit (ஸ்டார்ச் கரைசல்) மூலமாக நேரடியாக காட்சியளித்தார். மேலும் உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை சாறு பயன்படுத்தி வீட்டிலேயே அயோடின் இருப்பதை சோதிக்கலாம் என விளக்கமளித்தார். அயோடின் உப்பை திறந்த நிலையில் வைக்கக் கூடாது, மூடிய பாத்திரங்களில் வைத்துப் பயன்படுத்த வேண்டும் என்றும், மனிதனின் வாழ்நாளில் தேவையான அயோடின் அளவு வெறும் 5 கிராம் மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.
நுகர்வோர் அமைப்பு தலைவர் சம்பத் அவர்கள் நுகர்வோர் உரிமைகள் மற்றும் மன்றங்கள் பற்றியும் பேசினார். வட்ட வழங்கல் அலுவலர் த. முல்லைக்கொடி அவர்கள், அயோடின் சத்து இயற்கையாக காணப்படும் காய்கறிகள், மீன், இறைச்சி, பால் மற்றும் கடற்பாசி பற்றியும் விளக்கமளித்தார். இறுதியாக, அயோடின் பற்றாக்குறை தடுப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு மாவட்ட செயலாளர் பெரியசாமி, கல்லூரி ஆசிரியர்கள், மற்றும் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக தமிழ் துறை பேராசிரியர் ந. அசோக்குமார் நன்றி உரையாற்றினார்.

.jpg)