பாலக்கோடு, அக். 22 -
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொம்மநாயக்கனஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில், கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சாலையோரம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பாலக்கோடு போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மந்தை வீதியை சேர்ந்த கணேசன் மனைவி வள்ளி (42) என்று அடையாளம் காணப்பட்டார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாகவும், பல ஆண் நண்பர்களுடன் நெருக்கமும், குடிப்பழக்கமும் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
திருப்பூரில் உள்ள தனது மகளை பார்த்துவிட்டு திரும்பிய வழியிலேயே வள்ளி மர்மமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, மோப்ப நாயை வரவழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருச்சியை சேர்ந்த லாரி டிரைவர் புஷ்பராஜ் மீது போலீசார் சந்தேகத்தின் பேரில் வலை வீசி தீவிரமாக தேடிவருகின்றனர்.

.jpg)