வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து, இரு அணைகளிலிருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 23,994 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஒகேனக்கல்லை வந்தடைந்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லில் வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. மாலை 6 மணிக்குள் இது 50 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இன்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. நடைபாதைகள் மூழ்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு காவிரி ஆற்றில் குளிக்கும் தடை தொடர்ந்து 4-வது நாளாக அமலில் உள்ளது. அதேபோல், பரிசல் இயக்கத்திற்கும் விதிக்கப்பட்ட தடை 3-வது நாளாக நீடிக்கிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

.jpg)