தருமபுரி, அக். 23 -
சேலம் மண்டலம் தீயணைப்புத் துறை துணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பயன்பாடற்ற 12 தீயணைப்பு வாகனங்கள் வருகிற நவம்பர் 20-ம் தேதி காலை 10.00 மணிக்கு சேலம் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளன.
சேலத்தை தலைமை அலுவலமாகக் கொண்டு செயல்படும் சேலம் மண்டலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து தற்போது கழிவு செய்யப்பட்ட 1 இருசக்கர வாகனம், 1 ஆம்புலன்ஸ், 6 வாட்டர் டெண்டர்கள், 3 அம்பாசிடர் கார்கள், மற்றும் 1 போம் டெண்டர் என மொத்தம் 12 வாகனங்கள் ஏலத்திற்கு வரவுள்ளன.
பொது ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் தருமபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலகங்களை தொடர்பு கொண்டு டெண்டர் படிவங்களை பெறலாம். விண்ணப்பப் படிவங்கள் 27.10.2025 காலை 10.00 மணி முதல் 19.10.2025 முற்பகல் 10.00 மணி வரை வழங்கப்படும்.
விண்ணப்பத்துடன் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட பிரவுச்சர் பெறலாம். ஏலம் நடைபெறும் நாளான நவம்பர் 20-ம் தேதி காலை 10.00 மணிக்குள், ஆதார் அடையாள அட்டையுடன் முன்பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
ஏலத் தொகையுடன் சரக்கு மற்றும் சேவை வரி (GST) 18% சேர்த்து முழுத் தொகையையும் செலுத்திய பின், வெற்றியாளர்கள் தங்களது வாகனங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு தொலைபேசி எண்கள்: 9445086337, 04342-261018, 04342-230100 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில், கழிவு செய்யப்பட்ட 1 வாட்டர் டெண்டர் மற்றும் 1 அம்பாசிடர் கார் பொது ஏலத்திற்கு தயார் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.