பாலக்கோடு, அக்.28 -
பாலக்கோடு ஒன்றியத்தின் கும்மனூர் ஊராட்சிக்குட்பட்ட எக்காண்டஅள்ளி கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக 35 ஏக்கர் பரப்பளவில் தனியார் பிராய்லர் கோழிக்குஞ்சு உற்பத்தி ஹேட்சரிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து வெளிவரும் ரசாயனக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல், அருகிலுள்ள விவசாய நிலங்களில் வெளியேற்றப்படுவதாக உள்ளூர் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் சுமார் 15 அடி ஆழம் வரை பாதிக்கப்பட்டு, விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு மண் மலடாகி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நிலத்தடி நீர் மாசடைந்து நிறம் மாறியுள்ளதாகவும், கழிவு நீர் தேங்குவதால் புழுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் அதிகரித்து டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் நோய்கள் பரவும் அபாயம் நிலவுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலை குறித்து கோழிப்பண்ணை நிர்வாகத்திடம், கழிவுநீரை திறந்த வெளியில் வெளியிடாமல் சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பலமுறை கோரியிருந்தாலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி மூர்த்தி கூறுகையில்,
“கோழிப்பண்ணையிலிருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகளால் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு சுற்றிலும் ஈக்கள் அதிகரித்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நோய்தொற்று பரவுவதற்கு முன் அரசு இந்த கோழிப்பண்ணை நிறுவனத்தின் செயல்பாட்டை தடை செய்து, விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்,”எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

.jpg)