தருமபுரி, அக். 17 -
தீபாவளி திருநாளை முன்னிட்டு, தருமபுரி வாசன் கண் மருத்துவமனையில் 1 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் தொடங்கப்பட்டுள்ளது. பட்டாசுகள் வெடிக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் கண் தீக்காயங்கள் மற்றும் பார்வை பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க இந்த முகாம் அக்டோபர் 15 முதல் 24 வரை நடைபெறும்.
வாசன் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்ததாவது:
“குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும் பொழுது பெற்றோர் அவர்களுடன் இருப்பது அவசியம். தீவிபத்துகள் அல்லது பார்வை குறைபாடுகள் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வாசன் கண் மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டும்.”
இத்திட்டத்தின் சிறப்பம்சம் — கண் பரிசோதனை மட்டுமல்லாமல், தேவையான அறுவை சிகிச்சைகள் உட்பட அனைத்து மருத்துவ செலவுகளும் முழுமையாக இலவசமாக வழங்கப்படும். இந்த இலவச சேவை இந்தியா முழுவதும் உள்ள வாசன் கண் மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.
தருமபுரி வாசன் கண் மருத்துவமனையில் நடைபெற்ற தொடக்க விழாவில் தலைமை கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரியா, மருத்துவர்கள் டாக்டர் சரண்யா, டாக்டர் சந்தோஷி, டாக்டர் ஆர்த்தி, டாக்டர் வித்யா ஆகியோர் பங்கேற்று முகாமைத் தொடங்கி வைத்தனர்.
மருத்துவர்கள் தெரிவித்ததாவது:
“தீபாவளி மகிழ்ச்சியான விழாவாக இருக்க, குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.”