சில நிறுவனங்கள் கம்பெனி சட்டத்தின் கீழ் மட்டும் பதிவு செய்து, சீட்டு நிதி சட்டம், 1982-ன் கீழ் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யாமல் சீட்டு நடத்தி வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
“ஒரு சீட்டு நிறுவனம் கம்பெனி சட்டத்தின் கீழ் மட்டும் பதிவு செய்து, மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் சீட்டு நிதி சட்டம், 1982-ன் கீழ் பதிவு செய்யாமல் சீட்டினை நடத்துவது சட்டப்படி குற்றம். மேலும், பொதுமக்களும் இத்தகைய நிறுவனங்களில் ஏலச்சீட்டில் சேர்வது கூட குற்றமாகும்,” என அவர் எச்சரித்தார்.
சில நிறுவனங்கள் பதிவு பெற்றிருந்தாலும், மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திலிருந்து உரிய ஆணை பெறாமல் சீட்டுகளை நடத்துவது சட்ட விரோதம் எனவும் தெரிவித்தார்.
பொதுமக்கள் சீட்டில் சேரும் முன்:
-
அந்த நிறுவனம் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
-
பதிவு செய்யப்பட்ட சீட்டு ஒப்பந்தம் (Chit Agreement)-இல் தங்கள் பெயர் சந்தாதாரராக சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிய வேண்டும்.
-
பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியல் மாவட்டப் பதிவாளர் அலுவலக அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சீட்டு நிதி சட்டம், 1982 மற்றும் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் செயல்படும் சீட்டு நிறுவனங்கள் மற்றும் ஆட்டோ பைனான்ஸ் தொழில் நிறுவனங்கள் சீட்டு நடத்துவது சட்டப்படி குற்றம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரே. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.