பாரதரத்னா புரட்சித் தலைவர், டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி கலைத்திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. இச்சூழலில் கல்லூரி மாணவ-மாணவிகள் பாரம்பரிய கலைகளிலும் இக்கால தொழில்நுட்பங்களிலும் தங்கள் திறமைகளை போட்டிகள் மூலம் வெளிப்படுத்தினர்.
மாணவர்கள் இயல், இசை, நாடகங்கள், மயிலாட்டம், ஒயிலாட்டம், வில்லுபாட்டு உள்ளிட்ட கிராமியக் கலைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவின் நிறைவு நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் 32 வகையான போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசுந்தர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி அறிவுரைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் தீர்த்தலிங்கம், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், கல்லூரி பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இதில் கலந்துகொண்டனர்.