தருமபுரி – செப்டம்பர் 12 (ஆவணி 27) -
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் செயல்படுத்தப்படும் வாழ்வாதாரத் திட்டங்களில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் இனி அருகிலுள்ள இ-சேவை மையம் மூலமாகவே ஆன்லைனில் எளிய முறையில் விண்ணப்பிக்கலாம் என்று தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் சமூக பொருளாதார மேம்பாட்டு நோக்கில், தொழில் முனைவுத் திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டம், PM-AJAY உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரத் திட்டங்கள் தாட்கோவின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை விண்ணப்பதாரர்கள் தாட்கோ இணையதளம் மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகம் வழியாக விண்ணப்பித்து வந்தனர். இப்போது மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளதால், தங்கள் பகுதிகளில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக CM-ARISE, PM-AJAY மற்றும் நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண் 3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.