அரூர், செப்டம்பர் 13 (ஆவணி 28) -
தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் திடீர் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வுக்கு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தலைமையேற்றார். டீக்கடைகள், பேக்கரி, ஓட்டல்கள், மளிகை கடைகள் என பல்வேறு வணிக நிறுவனங்கள் பரிசோதிக்கப்பட்டன. உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் மற்றும் நல்லம்பள்ளி உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்குமார் ஆகியோர் இணைந்து ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, கலப்படம் செய்யப்பட்ட சுமார் 40 கிலோ டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. கலப்படம் செய்த கடை உரிமையாளர்களுக்கு, இனி இதுபோன்ற தவறுகள் நடந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.