அரூர், செப். 16 (ஆவணி 31) -
தருமபுரி மாவட்டம் பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் (பி.வி.கே அணி) பி.வி.கரியமால் (98) அவர்கள், உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.
சிறு வயதிலிருந்தே பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக போராடி வந்த இவர், இரட்டை குவளை ஒழிப்பு, தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுழைவு உள்ளிட்ட பல்வேறு சமூக நீதி இயக்கங்களில் கலந்து கொண்டவர். மேலும், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பட்டியலின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒற்றுமைக்காக பல மாநாடுகளை நடத்தியுள்ளார்.
அம்பேத்கரின் மகன் எஸ்வந்தராவ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, விசிக தலைவர் தொல். திருமாவளவன், பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ், வை. பாலசுந்தரம், பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, இஸ்லாமியர் தலைவர் பழனிபாபா, பிரகாஷ் அம்பேத்கர், பூவைமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் நெருக்கமாக பழகியவர் எனக் குறிப்பிடப்படுகிறார்.
மறைந்த பி.வி.கரியமால் அவர்களின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தினர். இவருக்கு மகன்கள் க.இளங்கோவன் (ஓய்வு பெற்ற மாவட்ட துணை வேலைவாய்ப்பு அலுவலர்), க.மணிமாறன் மற்றும் மகள்கள் க.பரிமளா, க.நிர்மலா, க.தமிழ்ச்செல்வி ஆகியோர் உள்ளனர். மறைந்த பி.வி.கரியமால் அவர்களின் உடல் நாளை பிற்பகல் 2 மணியளவில், அரூர் சிந்தல்பாடி சாலையில் உள்ள பாப்பிசெட்டிப்பட்டியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.