பாலக்கோடு, செப்.08 | ஆவணி 23 :
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சரவணன் அவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றதை முன்னிட்டு, பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காவேரி தலைமையில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு நிர்வாகி கோவிந்தசாமி, தலைமை ஆசிரியர் மலர்கொடி, உதவி தலைமை ஆசிரியர் செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த 18 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணியாற்றி வரும் சரவணன் அவர்கள், பள்ளியின் வளர்ச்சிக்காக பல்வேறு கல்வி மற்றும் சமூக செயல்பாடுகளில் பங்காற்றியுள்ளார். அவரது முயற்சியால் இப்பள்ளி காமராசர் விருது, சிறந்த பள்ளி விருது, சிறந்த பள்ளி மேலாண்மை குழு விருது, அறிவியல் புத்தாக்க விருது, சிறந்த ஆசிரியர் விருது, அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளது. மேலும், தேசிய திறனறி தேர்வு, விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகள் போன்ற துறைகளிலும் மாணவர்கள் பல வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
இத்தகைய சாதனைகளை ஊக்குவிக்கும் விதமாக, தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, சரவணன் அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்தது. அந்த விருதினை கொண்டாடும் வகையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், பள்ளி மேலாண்மை குழுத் தலைவி பழனியம்மாள், சக ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் இணைந்து அரை பவுன் தங்க மோதிரம் பரிசளித்து, மாலை அணிவித்து பாராட்டினார்கள்.
இவ்விழாவில் ஊர்கவுண்டர் கார்த்திகேயன், மந்திரி கவுண்டர் மாரியப்பன், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் பெரியசாமி, பிரமுகர்கள் கோவிந்தன், ராஜேந்திரன், சின்னசாமி, சுவீதா, முனியப்பன், மாதேஷ் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)