தருமபுரி, செப்டம்பர் 29:
அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மாணவன் S. சஞ்சய்-க்கு ரூபாய் ஒரு லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கி கௌரவிப்பு நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழா தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு சார்பாக, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 819 வீரர்கள், வீராங்கனைகள் ஆகியோருக்கு ரூபாய் 21.40 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டு பெருமை அடையச் செய்தது. S. சஞ்சய், தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை அறிவியல் கணிதத் துறை முதலாம் ஆண்டு மாணவர், கேரள மாநிலம் கோட்டையம் M.G பல்கலைக்கழகத்தில் 08-05-2024 முதல் 12-05-2024 நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டிகளில் சேலம் பெரியார் பல்கலைக்கழக அணிக்காக பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சஞ்சய் தமிழ்நாட்டிற்கும், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கும், தர்மபுரி அரசு கலைக் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார். தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் வகையில், மாணவர் S. சஞ்சய்-க்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
கல்லூரியில் மாணவரை பாராட்டி, உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு. பாலமுருகன், கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.