பாப்பாரப்பட்டி, செப்டம்பர் 13 (ஆவணி 28) -
இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தருமபுரி மாவட்டத்தின் 13-ஆவது மாநாட்டு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி. நாகராசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி கவுன்சிலர் வே. விசுவநாதன் வரவேற்றார். மாநில பொருளாளர் மாலதிசிட்டிபாபு, மாநில துணைப் பொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயினார், மாவட்ட செயலாளர் பி. ஜீவா, மாநிலக் குழு உறுப்பினர் சி. கலாவதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதற்குமுன், பாப்பாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மாநாட்டு பேரணியை மாநில பொருளாளர் மாலதிசிட்டிபாபு துவக்கி வைத்தார். பொதுக்கூட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட விலை நிர்ணயம் செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது, மோட்டார் வாகன சட்டத்திருத்தம் மற்றும் மின்சார வினியோக சட்டத்திருத்தங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒருங்கிணைப்பாளர் தர்மராஜன் நன்றி கூறினார்.