ஏரியூர், செப்டம்பர் 12 (ஆவணி 27):
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள இராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர் சுப்ரமணி, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். இதனை முன்னிட்டு பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் காமராஜர் விருது மற்றும் 100% தேர்ச்சி பெற்ற பள்ளியாக பாராட்டும் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பள்ளித் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆசிரியர் பெருமாள் வரவேற்புரை ஆற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைவாணி மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக முன்னிலை வகித்தனர்.
மேலும், வட்டார கல்வி அலுவலர், பல பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு விருது பெற்ற சுப்ரமணியை வாழ்த்தினர். குறிப்பிடத்தக்க வகையில், நல்லாசிரியர் விருது பெற்ற சுப்ரமணி அவர்கள், மாநில அரசு வழங்கிய ரூ.10,000 பரிசுத்தொகையுடன் தானாகவே ரூ.501 சேர்த்து, மொத்தம் ரூ.10,501-ஐ பள்ளி வளர்ச்சி நிதிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரிடம் ஒப்படைத்தார்.
இதன் மூலம் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை வழங்கிய சுப்ரமணி, கல்வியாளர்களிடையே முன்னுதாரணமாக அமைந்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஊரின் முக்கிய பிரமுகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என திரளானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி நிறைவில் அறிவியல் ஆசிரியர் மாரா கவுண்டர் நன்றி கூறினார்.
.gif)

