Type Here to Get Search Results !

ஒகேனக்கலில் உணவு பாதுகாப்புத் துறையினரின் திடீர் ஆய்வு.


தருமபுரி, செப்டம்பர் 10 (ஆவணி 25):


சுற்றுலா தலமான ஒகேனக்கலில், மீன் விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் திடீர் ஆய்வு நடைபெற்றது.


மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் மற்றும் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் மேற்பார்வையில், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மீன்வள ஆய்வாளர் வேலுசாமி, மேற்பார்வையாளர் மகேந்திரன் மற்றும் பணியாளர்கள் இணைந்து ஆய்வை மேற்கொண்டனர்.


மீன் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் தரமற்ற மீன்கள் அல்லது நீண்டநாள் இருப்பு மீன்கள் விற்பனை செய்யப்படவில்லை என ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. அதேசமயம், விற்பனையாளர்களுக்கு சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டியது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


நீர்வீழ்ச்சி செல்லும் சாலை மற்றும் முதலைப் பண்ணை அருகிலுள்ள கடைகளில், ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மீதமுள்ள எண்ணெயை உணவு பாதுகாப்புத் துறை அங்கீகரித்த ரூகோ டீலரிடம் ஒப்படைத்து உரிய தொகை பெறுமாறு வலியுறுத்தப்பட்டது.


மேலும், மீன் மற்றும் இறைச்சியை தூசி மற்றும் பிற அயற்காரணிகள் படாமல் கண்ணாடி பெட்டிகளில் பாதுகாப்பாக காட்சிப்படுத்தி விற்பனை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், “எங்கள் கடையில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதில்லை” என்ற வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்கள் உணவகங்கள் மற்றும் மீன் வறுவல் கடைகளில் ஒட்டப்பட்டன.


உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற்று, நுகர்வோர் பார்வைக்கு வைக்க வேண்டும் என அலுவலர் நந்தகோபால் வலியுறுத்தினார். மேலும், தொடர்ச்சியான ஆய்வுகள் நடைபெறும் என்றும், செயற்கை நிறமூட்டி, தடை செய்யப்பட்ட நெகிழி மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.


- செய்தியாளர் இர்பான்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies