தருமபுரி, செப்டம்பர் 22 | புரட்டாசி 06:
ஆட்சியர் தனது உரையில், படிப்போடு சேர்த்து மாணவர்கள் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்துவது அவசியம் என்றும், கலை மற்றும் திறமைகள் சமமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தினார். தமிழ்நாடு அரசு இந்தக் கலைத் திருவிழா மூலம் 32 கலைத்திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ளும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற போட்டிகளில் "புதியதோர் உலகம் செய்வோம்" என்ற தலைப்பில் கவிதைப்போட்டி, "சமூக வலைதளங்களும் அதன் தாக்கங்களும்" என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, தற்காப்புக் கலைப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
மேலும், செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை சிறுகதை, வர்ணனை, சமையல், குறும்படம், போட்காஸ்ட், விவாதம், ஓவியம், டிஜிட்டல் போஸ்டர், இளைஞர் பாராளுமன்றம், சொல்லிசை, தனி மற்றும் குழு நடனம், நாடகம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் திருமதி நா. இராமலட்சுமி, தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன், இணைப் பேராசிரியர்கள் முனைவர் ஆ. முருகதாஸ், முனைவர் விஜயா தாமோதரன், மாவட்ட நூலக அலுவலர் திருமதி கோகிலவாணி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.