பாப்பாரப்பட்டி, செப்டம்பர் 13 (ஆவணி 28) -
இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தருமபுரி மாவட்டத்தின் 13-ஆம் மாநாடு செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் பாப்பாரப்பட்டியில் நடைபெற்றது. செப்டம்பர் 12 அன்று பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மாநில மற்றும் மாவட்ட மட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தொழிலாளர் நலன்களை வலியுறுத்தினர். செப்டம்பர் 13 அன்று தோழர் இ. பொன்முடி நினைவரங்கத்தில் பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் பங்கேற்று பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.
மாநாட்டில், தருமபுரி மாவட்டத்தில் நிரந்தர தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தற்போது மாவட்டத்தில் பஞ்சாலைகள், கிரானைட் தொழிற்சாலைகள், 50-க்கும் மேற்பட்ட கார்மென்ட்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிற நிலையில், தொழிற்சங்கங்களோ அல்லது தொழிலாளர்களோ புகார் அளிக்க கிருஷ்ணகிரிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதால், பொருளாதார சிரமம் ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் பிரச்சினைகளும் கிருஷ்ணகிரியில் தீர்க்கப்பட வேண்டியிருப்பதை கருத்தில் கொண்டு, தருமபுரியில் அலுவலகம் அமைக்க வேண்டிய அவசியத்தை சிஐடியு வலியுறுத்தியது. மேலும், தொழிலாளர்கள் நலனுக்காக பி.எஃப் அலுவலகம் உடனடியாக துவங்கப்பட வேண்டும், இ.எஸ்.ஐ டிஸ்பன்ஸரி மற்றும் அலுவலகத்தில் பணியாளர்கள் போதுமான அளவில் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்கும் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 வழங்கப்பட வேண்டும், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை குறைக்கப்பட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.