பென்னாகரம், ஆக 12 | ஆடி 27 -
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பெரும்பாலை – மலையூர் காடு செல்லும் வழியில், மன்னர்களால் வழிபாடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரம் ஆண்டு பழமையான கோத்தல கொட்டை முனியப்பன் கோயிலில், வருடா வருடம் ஆடி மாதத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. பெரும்பாலை, மலையூர்காடு, சாணாரப்பட்டி, பெத்தானூர், ரோனிப்பட்டி, சோளிகவுண்டனூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், ஆடி மாதத்தில் விரதம் இருந்து முனியப்பன் சாமியை வழிபட்டனர். விரதம் இருந்து பூஜை செய்தால் விவசாயம் செழிக்கும், திருமணத் தடை விலகும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
நாகாவதி ஆற்றங்கரையிலிருந்து, சக்தி, ஈட்டி, வேல் ஆகியவற்றை ஏந்தி மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்த பக்தர்கள், முனியப்பன் சாமிக்கு பூக்கள் அலங்காரம் செய்து, பொங்கல் வைத்து, ஆடு, நாட்டுக்கோழி, பன்றி உள்ளிட்டவற்றை பலியிட்டு படையல் சமர்ப்பித்தனர். பின்னர் பக்தர்களுக்கு கறி விருந்து மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஊர் முக்கியஸ்தர்கள் கோவலன் மாரியப்பன், பூசாரிகள் தனசேகர், வேலு மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.