தருமபுரி – ஆகஸ்ட் 28, 2025 (ஆவணி 12)
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தலைமையில் இன்று (28.08.2025) நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அறிவித்த பல்வேறு வேளாண்மைத் திட்டங்கள், நலத்திட்டங்கள் விவசாயிகளுக்கு சரியாக அமைய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர். 2025-26 ஆண்டிற்கான விவசாய பரப்பளவு 1,72,280 ஹெக்டேர் ஆக நிர்ணயிக்கப்பட்டதில், ஆகஸ்ட் மாதம் வரை 38,832 ஹெக்டேர் பயிரிடப்பட்டு, நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துக்கள் 179.468 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
வருடாந்திர உரத்தேவை 41,030 மெட்ரிக் டன், யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட உரங்கள் போதிய அளவில் வைக்கப்பட்டு உள்ளன. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ஜிங்க்பாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் 29,030 எண்ணிக்கையிலானவை இருப்பு நிலையில் உள்ளன.
திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 9,043 விவசாயிகள் 7,382.06 ஏக்கர் பரப்பளவு பயிர்களை காப்பீடு செய்துள்ளனர். பட்டு வளர்ச்சித் துறையின் மூலம் 2025-26 ஆண்டிற்கு 542 ஏக்கர் மல்பரி சாகுபடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, ஜூலை மாதம் வரை 214 ஏக்கர் மல்பரி பயிரிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், கால்நடை பாரமரிப்பு, பட்டு வளர்ச்சி மற்றும் கூட்டுறவு துறைகள் சார்பில் திட்ட விளக்க உரையாற்றப்பட்டு, விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசுத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அனைத்து நிலை அலுவலர்களும் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உயிர் உரங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் சரியாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் படி அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், கூட்டுறவு ஆலை செயலாளர்கள், வேளாண்மை இணை இயக்குநர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

