தருமபுரி, ஜூலை 23 | ஆடி 07 -
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) ஆகியவை இணைந்து நடத்தும் இந்த முகாம், வரும் ஜூலை 26 ஆம் தேதி தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிசேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. இதில், 5,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேரடியாக பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதி கொண்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம். இம்முகாமில் பங்கேற்பது முழுமையாக இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலை தேடுவோர் மற்றும் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு dpijobfair25@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 04342-288890 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இம்முகாமில் தொழில் நிறுவனங்களும், வேலை தேடுநர்களும் அதிக அளவில் பங்கேற்று இந்த வாய்ப்பை பயனாக பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.