தருமபுரி, ஜூலை 29 | ஆடி 13 -
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் நோக்கில் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய திட்டத்தை கடந்த ஜூலை 15-ம் தேதி சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தர்மபுரி மாவட்டத்தில் இன்று (29.07.2025) தர்மபுரி மற்றும் பாலக்கோடு ஒன்றியங்களிலுள்ள சமுதாய கூடங்களில் மக்கள் சேவை முகாம்கள் நடைபெற்றன.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் வருகை தந்து முகாம்கள் நடைபெறும் இடங்களில் ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உடனடியாக தீர்வு வழங்கும் பணியில் ஈடுபட்டார். இதில், 35 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகள், பிறப்புச் சான்றிதழ்கள், வேலை உறுதி திட்ட அடையாள அட்டைகள், மின்சாரம் பெயர்மாற்ற ஆணைகள் மற்றும் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பினரும் எளிதில் மனுக்கள் அளிக்க தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உடனடி தீர்வுக்குரிய மனுக்களுக்கு துறைகள் சார்ந்த அலுவலர்கள் முகாமில் நேரிலேயே தீர்வு அளிக்கின்றனர். நீண்ட கால விசாரணை தேவைப்படும் மனுக்களுக்கு, அதிகபட்சம் 45 நாட்களுக்குள் தீர்வு அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் திருமதி. காயத்ரி, வட்டாட்சியர்கள் திரு. சௌகத்அலி, திரு. அசோக் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், பல்வேறு துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.