பஞ்சப்பள்ளி, ஜூலை 20 | ஆடி 04 -
தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள பாளையம் – செங்காடு கிராமத்தில் நேற்று இரவு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் விடியற்காலம் வரையிலும் இல்லாததால் சந்தேகத்தில் இருந்த கிராம மக்கள், அருகிலிருந்த டிரான்ஸ்பார்மர் பகுதியில் சென்று பார்த்தபோது, அதில் பொதிகப்பட்டு கிடக்கும் சில்லுகள் மற்றும் உடைந்த பொருட்கள் காணப்பட்டன.
தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டபோது, டிரான்ஸ்பார்மர் முற்றிலும் உடைக்கப்பட்டு, அதிலிருந்து சுமார் 200 லிட்டர் ஆயில் (மதிப்பு ரூ.25,000) மற்றும் காப்பர் கம்பிகள் (மதிப்பு ரூ.50,000) திருடப்பட்டுள்ளதற்கான உறுதி கிடைத்தது. இதையடுத்து, மின் வாரிய உதவிப் பொறியாளர் சத்யா, பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய சம்பவங்கள் திருடர்களால் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், கிராமப்புறங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.