பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 22 | ஆடி 06 -
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே அமைந்துள்ள அரூர் – சேலம் 179A தேசிய நெடுஞ்சாலை சமீபத்தில் நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட்டது. இந்நெடுஞ்சாலையில் H.புதுப்பட்டி பகுதியில் புதிய சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு, நேற்று இரவு முதல் சுங்கக் கட்டணம் வசூல் துவங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கான வசதிகள் இல்லாமையால், சுங்கச் சாவடியில் அவதி நிலவுகிறது. 8 லைன்கள் கொண்டதாக சாவடி இருந்தும், கடைசி 2 லைன்களில் மட்டுமே பூத்கள் செயல்படுகின்றன. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
மேலும், Fastag வசதியும் தொடங்கப்படவில்லை என்பது பெரும் குறையாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். காலையில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றன. அதோடு, தானியங்கி கதவுகள் பழுதடைவதும் போக்குவரத்தை பாதிக்கிறது. இயல்பான சாவடி வசதிகள், கட்டண விவரங்கள் மற்றும் சாலை நிலைமை ஆகியவை முழுமையாக தயார் செய்யப்படாத நிலையில் கட்டணம் வசூலிக்கப்படுவது பொதுமக்களிடையே எதிர்வினையை உருவாக்கியுள்ளது. அறிவிப்பு பலகையில் தற்காலிக பேப்பர் ஒட்டப்பட்டிருப்பதும் ஒரு கேள்விக்குறியாக உள்ளது.
மஞ்சவாடி கணவாய் முதல் அயோத்தியாப்பட்டிணம் வரை சுமார் 20 கி.மீ.தூரம் சாலை பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதற்கிடையே சாலை பணிகள் முழுமையாக முடியாமலும், சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதும் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் நெடுஞ்சாலை துறைக்கு புகார்கள் அளித்து, அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்ட பின்னரே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
🖊️ செய்தியாளர்: அருண்குமார்.ஜெ