பாலக்கோடு, ஜூலை 25 | ஆடி 09 -
பாலக்கோட்டில் செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகள், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. பாலக்கோடு புதுபட்டாணியர் தெருவைச் சேர்ந்த அன்சர் பாஷா என்றவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவரது மகள் குல்சான், திருமணமாகி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வருகிறார்.
அன்சர்பாஷாவின் பெயரில் உள்ள வீட்டை சம்பந்தப்பட்ட ப்ரோக்கர் ஜீயான் வழியாக, வாரிசுச் சான்றிதழை தவறாக திருத்தி, குல்சானின் பெயரை நீக்கி, அவரது சகோதரர் நவாஷ்பாஷா பெயரில் பத்திர பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையறிந்த குல்சான், உண்மையான வாரிசுச் சான்றிதழை சார் பதிவாளர் கவிதாவிடம் சமர்ப்பித்து, முறைகேடாக நடந்த பதிவு செயலில் நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 15 நாட்களுக்கு முன் மனு அளித்திருந்தார்.
ஆனால் சார் பதிவாளர் கவிதா சாக்குபோக்குகளைக் கூறி நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்துவருவதாகவும், பணத்திற்காக பத்திர பதிவை முறைகேடாக செய்துவிட்டதாகவும் குல்சான் தெரிவித்துள்ளார். மேலும், அவரது கணவர் இம்ரான் கூறுகையில், பாலக்கோடு சார் பதிவாளர் அலுவலகம் சில ப்ரோக்கர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருவதாகவும், அங்கீகரிக்கப்பட்ட எழுத்தர்கள் 4 பேரே இருந்தாலும், 10க்கும் மேற்பட்ட போலி எழுத்தர்கள் அங்குள்ளவர்களாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த செயற்பாட்டில், ஆதார் அட்டையில் முகங்களை மாற்றி பத்திரங்களை பதிவு செய்தல், வாரிசு சான்றிதழ்களில் உள்ள சிலரது பெயர்களை திட்டமிட்டு நீக்குதல், போலி வாரிசு சான்றிதழ்களை உருவாக்கி, பத்திரங்களை பதிவு செய்வது போன்ற மோசடிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது போன்ற நடவடிக்கைகள் சட்டத்தை புறக்கணிப்பதாகவும், அப்பாவி பொதுமக்களுக்கு நீதியின்மை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.
இந்த நிலைமையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில், முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், சார் பதிவாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எதிராக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.