தருமபுரி, ஜூலை 20 | ஆடி 04 -
தருமபுரி மாவட்டத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மை தருமபுரி அமைப்பு, பல்வேறு மனிதநேய பணிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதில் குறிப்பிடத்தக்கது, உறவினர்கள் இல்லாமல் ஆதரவின்றி உயிரிழக்கும் மக்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்யும் 'அமரர் சேவை' ஆகும்.
இந்த சேவையின் ஒரு பகுதியாக, இதுவரை மொத்தமாக 149 உடல்களை மரியாதையுடன் நல்லடக்கம் செய்துள்ளனர். இதில் 111 ஆண்கள், 15 பெண்கள், 4 பச்சிளம் குழந்தைகள், 6 ஏழ்மை காரணமாக இறந்தோர், 13 வடமாநில நபர்கள் அடங்கினர். இவ்வாறு அடையாளம் தெரியாமல் இறந்த இந்த 149 உயிர்களும் தங்கள் சொந்த உறவினர் என எண்ணி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இப்போது, அவர்களது ஆத்மா சாந்தியடைய, ராமேஸ்வரம் அக்னிதீர்த்தத்தில், 'ஆத்மாத்ம சாந்தி பூஜை' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வேதக் கருத்துப்படி, ஆதரவற்ற உயிர்களுக்கு மரியாதை தருவது அஸ்வமேத யாகத்திற்கும் சமமானது என்று கூறப்படுகிறது. இந்த புனித பூஜையை ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண ஐயர் அவர்கள் வேதமுறைப்படி சிறப்பாக நடத்தினார்.
இந்த நிகழ்வில், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் முனைவர் சதீஷ்குமார் ராஜா, அமைப்பாளர்கள் செந்தில், அருள்மணி, சண்முகம், கிருஷ்ணன், சையத் ஜாபர், எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், தன்னார்வலர்கள் கணேஷ், குணசீலன் ஆகியோர் பங்கேற்று, பரிவும் பக்தியுமாக ஆத்மா சாந்தி பூஜையில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வின் மூலம், மரணம் எவருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், மரியாதையுடன் இறுதியடைந்து, அந்த உயிர்கள் அமைதியாக நித்திரை செல்லும் வகையில் சமூகத்திலே ஒரு முக்கிய உரைபாடாக அமைந்துள்ளது. மை தருமபுரி அமைப்பின் இந்த அர்ப்பணிப்பு செயல், மனித நேயத்தின் உண்மையான உருவகமாக போற்றப்படுகிறது.