தருமபுரி, ஜூலை 20 | ஆடி 04 -
மை தருமபுரி அமைப்பின் சார்பாக, தருமபுரி மாவட்டம் மற்றும் தமிழகமெங்கும் மனிதநேயத்துடன் பல்வேறு சேவைகள் அடித்தட்டு மக்களுக்கு எட்டும் வகையில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, புற்றுநோய் பாதித்த குழந்தைகள் மற்றும் மக்களுக்கு தட்டணு தானம், இரத்த தானம், போன்ற அவசர தேவைச் சேவைகளை மையமாக வைத்து செயல்பட்டு வருகின்றனர்.
புற்றுநோய் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு ஏற்படும் முடி உதிர்வு மனஉளைச்சலை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, தலைமுடி செய்வதற்கான 'கூந்தல் தானம்' விழிப்புணர்வு நிகழ்வுகள் தருமபுரி மாவட்டம் முழுவதும் இந்த அமைப்பின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், தருமபுரி அரசு மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள அமலா நர்சரி பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வரும் இரட்டைச் சகோதரிகள் ரித்திகா மற்றும் ரூபிகா, புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக தங்களது கூந்தலை தானமாக வழங்கிய சிறப்பான செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.