பென்னாகரம், ஜூலை 20 | ஆடி 04 -
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஐந்தாவது ஒன்றிய மாநாடு கோலாகலமாக நடைபெற்றது. பென்னாகரம் கூத்தப்பாடி திரௌபதி அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு ஆ.ஜோதி தலைமை வகிக்க, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கமலா மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். கே.முத்துச்செல்வி வரவேற்புரை வழங்க, மாவட்டத் தலைவர் அ.ஜெயா துவக்க உரையாற்றினார்.
மாநாட்டின் வேலை அறிக்கையை ஒன்றிய செயலாளர் எம்.வளர்மதி வாசித்து விளக்கினார். மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா வாழ்த்துரை வழங்க, மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா உரையாற்றி, பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் மற்றும் தீர்வுகளை விரிவாக எடுத்துரைத்தார்.
மாநாட்டில் முக்கியமாக, நியாய விலைக் கடைகளில் அனைத்து விதமான பொருட்களும் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், ரேஷன் கடைகளில் நடைமுறையில் உள்ள "ரேகை வைக்கும்" முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பென்னாகரம் பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும், அதன் பணிநாட்கள் 200 ஆக அதிகரிக்க வேண்டும், கூலி ரூ.600 ஆக உயர்த்தப்பட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பென்னாகரம் வட்டத்தில் அரசு மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இதற்குபின், புதிய ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது. அதில், தலைவராக தங்கம், செயலாளராக சரண்யா, பொருளாளராக ரத்தினம் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு, சமூக நலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினர். அம்பிகா நன்றி உரையாற்றி மாநாட்டை நிறைவு செய்தார்.