தருமபுரிம் ஜூலை 21 | ஆடி 05 -
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டும், மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
ஏழ்மையில் வாழ்ந்த மல்லிகாவின் உடலுக்கு உறவினர்கள் அல்லது பொருளாதார ஆதரவு இல்லாத நிலையில், அவரது புனித உடலை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய "மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர்" தங்களது பணியை மேற்கொண்டனர். இந்த புனிதச் செயலில், நாட்றம்பள்ளி காவலர் ராஜீவ், மருத்துவர் ஸ்ரீகாந்த், வடிவேல் மற்றும் அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் செந்தில், சண்முகம் மற்றும் தன்னார்வலர் கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு இறுதி அஞ்சலியையும் நல்லடக்கத்தையும் நடத்தினர்.
மை தருமபுரி அமைப்பினர் இதுவரை 150 புனித உடல்களை முழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்து சமூகத்தில் முக்கியப் பங்களிப்பு அளித்து வருகின்றனர். மேலும், இறந்த ஆன்மாக்களின் சாந்திக்காக ஓகேனக்கல் காவிரி ஆறு, ராமேஸ்வரம், திரிவேணி சங்கமம் போன்ற புனித இடங்களில் "ஆத்மா சாந்தி பூஜைகள்" நடத்தியும் வருகின்றனர்.