தருமபுரி, ஜூலை 13 (ஆனி 29) -
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில், தமிழக அரசு செயல்படுத்தும் "உங்களுடன் ஸ்டாலின்" மக்கள் நல்வாழ்வுத்திட்டத்தை மக்களிடம் விளம்பரப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட விளம்பர ஆட்டோக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப. அவர்கள் இன்று (13.07.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு விண்ணப்பங்களையும் வழங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், வருகிற 15-07-2025 அன்று முதல் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன என்று தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் வாயிலாக, நகர்புறங்களில் 13 துறைகளின் மூலம் 43 சேவைகள், மற்றும் ஊரக பகுதிகளில் 15 துறைகளின் மூலம் 46 அரசு சேவைகள் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்படவுள்ளன. மக்களுக்கு வீடு தேடி சென்று அதிகாரிகள் திட்ட விண்ணப்பங்களை வழங்கி வருவதாகவும், அந்த விண்ணப்பத்துடன் முகாம்கள் நடைபெறும் இடத்தில் கலந்து கொண்டு தேவையான சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, தருமபுரி நகர மன்றத் தலைவர் திருமதி லட்சுமி, நகரச் செயலாளர் நாட்டான் மாது, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கௌதம், ஒன்றியச் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் பல்வேறு அரசு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.