நல்லம்பள்ளி, ஜூலை 12 (ஆனி 29) -
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கொட்டாவூர் பகுதி, TATA நகர் எதிரில், CKM பெட்ரோல் பங்க் அருகே சாக்கடை கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்வதால் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வடக்கு தெருவில் இருந்து பெட்ரோல் பங்க் வரை சாலையில் ஓரத்தில் கழிவுநீர் ஓடிக்கொண்டு இருப்பதால் பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கோந்தராஜ் என்பவரின் வீடு அருகிலிருந்து இந்த கழிவுநீர் சாலையில் பாய தொடங்கி, சாலை முழுக்க ஓடுவதால், அப்பகுதியில் கொசுகள் அதிகரித்து, சுகாதாரத்துக்கும் கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது பற்றி பலமுறை அதிகாரிகளிடம் புகார் கூறியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. "நாங்கள் சொல்லி சொல்லி சோர்ந்து போயாச்சு. சாலை சுத்தம் பண்ணினா கூட நாளைக்குள்ளே இதே நிலைதான். நிரந்தர தீர்வு தேவை" என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாக்கடை அடைப்பை சரிசெய்வதுடன் சாலையில் ஏற்பட்ட சேதத்தை உடனடியாக சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உள்ளதாக பொதுமக்கள் வலியுறுத்துகிறார்கள்.