பாலக்கோடு, ஜூலை 15 (ஆடி 31) -
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள அமானிமல்லாபுரம் கிராமத்தில், தமிழ்நாடு அரசின் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் முகாம் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜூலை 15ஆம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாநிலம் முழுவதும் 15 துறைகளில் 46 சேவைகள் வழங்கும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்தே, அமானிமல்லாபுரத்தில் உள்ள மக்களுக்கு அரசு சேவைகள் நேரிலேயே வழங்கும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
முகாமினை, பாலக்கோடு திமுக மத்திய ஒன்றியச் செயலாளர் முனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் வக்கீல் முருகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இம்முகாமில் அனைத்து அரசு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், புதிய குடும்ப அட்டை சேர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றனர்.
முகாமில், காவல் உதவி கண்காணிப்பாளர் மனோகரன், வட்டாட்சியர் ரஜினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிகணேஷ், ரேணுகா, பாலக்கோடு தெற்கு திமுக ஒன்றியச் செயலாளர் ஆனந்தன், மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.