அரூர் | ஜூலை 16 (ஆனி 32)-
சேலம் – அரூர் இடையே அமைந்துள்ள 179A தேசிய நெடுஞ்சாலை சுமார் 45 கிலோமீட்டர் தொலைவுக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது சாலைப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட நிழற்குடைகள் முழுமை அடையாமல் இருக்கும் நிலை பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோம்பூர், மஞ்சவாடி, காளிப்பேட்டை, குமரக்கோட்டம், சமத்துவபுரம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், மேற்கூரை மற்றும் பென்ச் பொருத்தப்பட்டாலும், கீழ் தளபாடம் சிமென்ட் புச்சு இல்லாமல் கான்கிரீட் ஜல்லிக் கற்களுடன் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது. பயணிகள் தவறி விழும் அபாயம் இருப்பதால், இந்தப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், இந்த தேசிய நெடுஞ்சாலையில் காளிப்பேட்டை, சாமியாபுரம் கூட்ரோடு, அ.பள்ளிப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு போன்ற இடங்கள் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாக உள்ளதால், சாலையின் மைய பகுதியில் தெரு விளக்குகள் அமைக்கப்பட வேண்டும் என்பது மக்களின் முக்கியக் கோரிக்கையாகத் தென்படுகிறது. இந்த கோரிக்கைகள் மீது நெடுஞ்சாலை துறை துரித நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.