![]() |
Image Source : google search |
தருமபுரி, ஜூலை 13 (ஆனி 29) -
தருமபுரி மாவட்டம், நந்தி நகர் பகுதியில் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருள் மாறி வந்ததாக ஒரு நபர் ஆத்திரம் கொண்டு கொரியர் ஊழியரை தாக்கினார் என கூறி சில தனியார் செய்தி ஊடகங்களில் தகவல்கள் பரவியதை தொடர்ந்து, போலீசார் தற்போது அதற்கான விளக்கத்தை வெளியிட்டுள்ளனர்.
தருமபுரி தாலுகா, நந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஹரிகரன் என்பவர், தனியார் கொரியர் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 29.06.2025 அன்று, ஜெகன் என்ற நபருக்கு வந்த பார்சலை ஹரிகரன் வழங்கியுள்ளார். அதன் பிறகு, "பார்சலில் வந்த பொருள் சரியில்லை" என கூறி, ஜெகன் என்பவர் ஹரிகரனை திட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஹரிகரன் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் மனு ரசீது எண் 1526/2025 என பதிவு செய்து, காவல் உதவி ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பான தகவலை தருமபுரி மாவட்ட சமூக ஊடகப் பிரிவு தற்போது உறுதி செய்து, சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு கேட்டுக்கொண்டுள்ளது.